ரத்த பந்தம்- விமலா ரமணி
அவன் காத்திருந்தான்... அவன்... ? ராமு!மருத்துவமனையின் அந்த நெடிய வராந்தாவில் காத்திருந்தான். இவனைப்போல் இன்னும் பலர் ஆளாளுக்கு கையில் ஒரு சீட்டு... ஒரு கோப்பு... கூட்டம் கூட்டம்... எங்கும் கூட்டம்!இத்தனை பேர்களுக்கும் பிரச்சனையா? ஒரு பக்கம் 'டோக்கன்' நம்பர் சொல்லி கூப்பிட இன்னொரு பக்கம்..., "காலையில் இருந்து காத்திருக்கிறேன். இன்னும் என்னைக் கூப்பிடலை" என்று ஒருவர் சிணுங்க..., சீருடை அணிந்த அந்த மருத்துவமனை ஊழியர்கள் இயந்திரத்தனமாக நடக்க..., சக்கர நாற்காலியிலும், ஸ்ட்ரெச்சரிலும் வரும் நோயாளிகள்..., அவர்களுடன் ஒட்டிக்கொண்ட உறவுகள்...,இந்த உறவுகள் எல்லாமே இதுபோல கடைசி காலத்திற்குத்தான்..., உடம்பில் தெம்பு இருக்கறவரை யாருக்கும், எதைப் பற்றியும் அக்கறை இல்லை; கவலை இல்லை. நோவு வந்துவிட்டால் நொடித்துப் போவார்கள். உடல் பலம், பண பலம், ஆள் பலம் எல்லாமே போய் நடைபிணமாகக் காட்சி தருகிறவர்கள் எத்தனை பேர்...?"என்னங்க?" அருகிலிருந்த மனைவி கீதா இவனை தொட்டு கூப்பிட்டாள். மெல்லக் கேட்டாள்."என்ன?’""இத்தனை நேரமாச்சே... இன்னுமா 'ஸ்கேன்' எடுத்து முடியலை? நல்ல பதிலா சொல்லுவாங்களா?"கண்களில் நீர் திரையிட, பாதி அழுதபடி கேட்கும் மனைவி.நல்ல பதில்? என்ன பதில்? சே... என்ன கீழ்தரமான நினைவு...ஒரு மாதமாக ஆஸ்பத்திரிக்கும், வீட்டிற்கும் அலைகிறான். ஒரு பதிலும் தெரியவில்லை. ஒரு முடிவும் தெரியவில்லை. இந்த துன்பம் எப்போதிலிருந்து ஆரம்பமானது என்பதும் தெரியவில்லை."ராமு...வயிறு வலிக்கற மாதிரி இருக்குடா... டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறியா?""வேற வேலை இல்லை! வயசானா அப்படித்தான் ஒண்ணு மாத்தி ஒண்ணு வரும். வாயைக் கட்டிட்டு சும்மா இருக்கணும். பலாச்சுளையை முழுங்கினே... அதான்...!’""ரெண்டு சுளைதாண்டா கீதா கொடுத்தா.""பார்த்தீங்களா... நான் பட்னி போடுறேன்னு உங்கம்மா சொல்றாங்க...""அடடா... என்ன எழவு இது? சும்மா இருங்க ரெண்டு பேரும்."இன்னொரு நாள்..."ராமு தலை சுத்தற மாதிரி இருக்கு. பிரஷர் அதிகமாகி இருக்குமோ என்னவோ தெரியல்லை... டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறியா?""எனக்குக்கூடத்தான் ஆபீஸ் டென்ஷன்... தலை சுத்துது. பேசாம ஓய்வு எடு... அக்கம் பக்கம் வம்பு பேசாம இருந்தாலே போதும்.’""ராமு, சுற்றுலா போறாங்களாம். மூவாயிரம் ரூபாய்தானாம். எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கித் தர்றியா? பக்கத்து வீட்டு அம்மா இருக்காங்க. துணைக்குக் கவலை இல்லை.""மூவாயிர ரூபாய் என்ன கொட்டியா கிடக்கு? நிர்மலாவை காலேஜூலே சேக்கணும். ஏகப்பட்ட செலவு இருக்கு""என்னோட பென்ஷன் பணத்துல இருந்து தாயேன்.""ஓ! என் பணம், உன் பணம்ணு பேச ஆரம்பிச்சுட்டியா? உனது பிச்சைக் காசு எந்த மூலைக்கு? நீ குடிக்கிற பில்டர் காப்பி, பால், போகிற கோயில், குளம் அர்ச்சனை இதுக்கே சரியாயிடும். நானும் பெருந்தன்மையா இதைப் பத்தியெல்லாம் பேசாம இருந்தேன்.""ராமு... பெத்த தாய்க்கு சோறு போடுறதுக்குக் கணக்கு காட்டுறியா?""ஏன் குதர்க்கமா அர்த்தம் பண்ணிக்கிற? அப்பா போய் அஞ்சு வருஷம் ஆச்சு. உன்னோட ஆயிரம் ரூபாயிலேதான் குடும்பம் நடக்கிறதா என்ன?"அதன் பின் கிழவி பேசவே இல்லை'என்னை முதியோர் இல்லத்திலே சேர்த்துவிடு' என்று கூறவும் முடியாது. முன் பணம் கட்ட வேண்டுமாமே! உடம்புக்கு ஏதாவது நோய் வந்தால் கொண்டு வந்து விட்டுவிடுவார்களாம். கிழவி யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது. எல்லா நகைகளும் போய்விட்டன. காதில் ஒரு வைரத்தோடு மட்டும் மிஞ்சி இருக்கிறது. அந்தக் காலத்து கட்டிங்... எண்ணெய் இறங்கி வைரமா, சாதா கல்லா என்று தெரியாதபடி மங்கலாக இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு கேரட். என்னதான் மட்டமாக விலை போட்டாலும் இருபதினாயிரம் தேறும். அதை விற்று ஏதாவது முதியோர் இல்லத்தில் கொடுத்துவிட்டு, மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷனுடன் வாழலாம் என்கிற நினைப்பு!பக்கத்துவீட்டு அம்மாள் உதவுவாள்.எந்த நேரத்தில் கிழவி இதை நினைத்தாளோ...! அப்போதுதான்...ராமு ஆஸ்பத்திரியில் 'ஐ.சி.யு.' வார்டுக்கு முன்னால் காத்திருந்தான்.அப்போது ஒரு வயதானவரை சக்கர நாற்காலியில் வைத்து ஆஸ்பத்திரி ஊழியர் தள்ளிக்கொண்டு வர, கூடவே ஒருவன் நடந்தபடி வந்தான். மத்திம வயதுதான். பெரியவரை உள்ளே அழைத்துப் போனார்கள்.அந்த ஆள் வெளியே காத்திருந்தான்.ராமு பார்த்தான். நடுத்தர வயது இருக்கும். கையிலே ஒரு துணிப்பை. மருத்துவமணை ஊழியர் ஏதோ சீட்டு ஒன்றை காட்ட, இவன் அந்தப் பையிலிருந்து கட்டுக்கட்டாக நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்தான்.ராமு பேசாமல் இருந்தான். மருந்தெல்லாம் வாங்கிக் கொடுத்தபின் அந்த ஆள் சோர்வுடன் அமர்ந்திருந்தபோது, ராமு அருகில் போனான்."அப்பாவா?"நீர் நிரம்பிய கண்களைத் துடைத்தவன் சிரித்தபடி, "ஆமாங்க... எங்க ஐயாதான்" என்றான்."என்ன பிரச்சனை?"அவன் சிரித்தபடி கூறினான். "போன வருஷம் பாத்ரூமிலே கீழே விழுந்து முதுகுத் தண்டுவடத்துலே அடிபட்டு ஆபரேஷன் பண்ணி படுக்கையில் இருந்தார். படுத்துப் படுத்து பாதிப்பு வந்திடுச்சு. இப்போ சிறுநீரகம் சரியா வேலை செய்யலை. அதுக்குத்தான் வந்திருக்கேன். கிட்டத்தட்ட எட்டு லட்சம் ரூபாய் செலவழிச்சாச்சு."இவன் பிரமித்தான். "இவ்வளவு செலவா?" என வாய் பிளந்தான்."பெத்தவருங்க... அவருக்கு ஏதாவது ஆகிப் போச்சுன்னா என் மனசாட்சி என்னை சும்மா விடாதுங்க. அம்மாவுக்கு சக்கரை நோய். ஒரு காலை எடுத்துட்டாங்க. 'ஸ்டிக்' வைச்சு நடந்துட்டு இருக்காங்க. இதோ அப்பாவுக்கு இப்படி! என்னை ஆளாக்கின தெய்வங்க, பெத்தவங்க. அவங்களுக்கு செலவு செய்யறதைக் கணக்கு பார்க்கலாங்களா? சொல்லுங்க. நிலபுலனை வித்து பணம் கொண்டு வந்திருக்கேன். நான் ஒண்ணும் பெரிய பணக்காரன் இல்லீங்க. ஆனா, பெரிய மனசுக்காரன். என் ஒரே பொண்ணு போன ஆண்டு ரத்தப்புற்றுநோயில் இறந்து போயிட்டா. நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணலீங்க. இது போன ஜென்மப் பாவம். மிச்சம் அனுபவிக்கிறேன்.. அதான்! அழுறதுன்னாகூட தனியாதான் அழுவேன். பெத்தவங்க மனசு நோகக்கூடாது இல்லீங்களா? நான் அதிகப் படிப்பும் படிக்கலீங்க. மகளை படிக்க வைக்க ஆசைப்பட்டேன். அது கொடுத்து வைக்கலை. இப்பவும் என் ஐயனுக்கு எம் மக இறந்த சமாசாரம் தெரியாது. ஏதோ மேல் படிப்பு படிக்க பட்டணம் போயிருக்குன்னு நினைச்சுட்டு இருக்கார். பெத்தவங்க மனசு நோகலாங்களா? நீங்க படிச்சவர்... நீங்களே சொல்லுங்க..."அந்தப் படிப்பறிவில்லாத ஏழை விவசாயி பேசப் பேச, ராமு கூனிக் குறுகிப்போனான்.ஆம்! இவன் அதிகம் படிச்சவன்தான்... படிச்சவர்...பெத்தவங்க மனசு நோகக்கூடாது என்று இந்த ஏழை நொந்து நூலாகிப் போய்விட்டான். என்ன மனசு இது?இப்பொழுது ராமு அனுபவித்துக் கொண்டிருப்பது பூர்வஜென்மப் பாவம் இல்லை! கர்மவினை இல்லை!இந்த ஜென்மத்தில் இவன் தெரிந்தே செய்த பாவம்! துரோகம்! பெத்தவளின் புண்பட்ட மனதை வேலால் குத்திய வேதனைக்கு தண்டனை?பால் கொடுத்த தாயின் ரத்தம் குடித்த கயவன் இவன்!'என் பெண்ணை கல்லூரியில் சேர்க்க பணம் வேண்டும்' என்று சொன்னானே... இப்போது அதே பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு இதோ... இதோ... இங்கே ஜீவ மரணப் போராட்டத்தில் முடிவு தெரியக் காத்திருக்கும் நரக வேதனை... இது இந்த ஜென்மப் பாவந்தான்! சந்தேகமே இல்லை..."சார்... ராமுங்கிறது..." ஆஸ்பத்திரி ஊழியர் கேட்டார்."நான்தான்." இவன் பரபரப்புடன் எழுந்தான்."ஆபரேஷன் பண்ணணும். இருபதினாயிரம் ரூபாய் கட்டணும். டாக்டர் சொல்லச் சொன்னார்."இருபதாயிரம் ரூபாய்...ராமு திகைப்புடன் நின்றிருந்த அதே நேரம்...அந்த மருத்துவமனை வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்க... அதிலிருந்து ராமுவின் தாய் இறங்கினாள்."ராமு, என்னப்பா இது? எங்கிட்டேகூடச் சொல்லலை. நம்ப நிர்மலாவுக்கு மூளைக் காய்ச்சலாமே; இந்தாப்பா... என்னோட வைரத்தோடை வித்து இருபதாயிரம் ரூபாய் கொண்டு வந்திருக்கேன். செலவுக்கு வச்சுக்கோ. நல்லவங்களை கடவுள் கைவிடமாட்டார், கவலைப்படாதே..."காகிதத்தில் சுற்றிய அந்த ரூபாய் நோட்டுக் கட்டை, ராமுவின் கரங்களில் கிழவி தந்தபோது.. ராமு தன் தாயின் கரங்களைப் பிடித்தபடி, அது மருத்துவமனை என்பதையும் மறந்து அழ ஆரம்பித்தான்.ஒரு தீனமான அலறல் அந்த மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தது.


0 comments:
Post a Comment