Thursday, May 21, 2009

என் அருமை மகள்

'என்ன பெண் இவள்!'
என்ற அங்கலாய்ப்புடன்
ஆரவாரமாய் விடிகிறது,
என் ஒவ்வொரு காலையும்!

தலைக்குமேல் வளர்ந்த பின்னும்,
தலைவாரத் தெரியவில்லை என்று
கடுகடுத்தால் போதும்; தன்
இடுப்பளவுக் கூந்தலை
இரண்டேகால் அங்குலமாய்க்
கத்தரித்துவிடுவேன் என்றே,
கலவரப்படுத்துகிறாள் என்னை!

வெந்நீர் கூட வைக்கத் தெரியவில்லையென
வேகமாய்ச் சாடினால்,
சமையற்கலை படித்தவனை
மணமுடிப்பேன் என்று
சற்றும் பதற்றமின்றி,
சாவகாசமாய்ச் சொல்கிறாள்!

வாசல் தெளித்து, கோலமிடத்
தெரியவில்லையே உனக்கு! என்றால்,
'அடுக்குமாடிக் குடியிருப்புக்கு,
வாசற்கோலம் எதற்கு' என்கிறாள்!

'எதிர்ப்பேச்சு பேசாதே!' என்றால்,
'ஏனம்மா பேசக்கூடாது?' என்று,
எதிர்க்கேள்வி கேட்கிறாள்!

கொந்தளிக்கும் கோபத்தோடு,
'நீ என் அம்மாவிடம் வளர்ந்திருக்கவேண்டும்;
அப்போது தெரிய வந்திருக்கும்
அத்தனைக் கலைகளும்!' என்றேன்!

அருகே வந்து,
ஆசையாய் என் தலைகோதிச் சொல்கிறாள்,
'பாவம் அம்மா, நீ!
அன்பு மகளாய் வளராது,
அருமை மாணவியாய் வளர்ந்திருக்கிறாய்!
அன்னையின் உருவில் ஓர்
ஆசிரியையைப் பெற்றிருக்கிறாய்!

நானோ,
அன்னையெனக் காண்பது, என்
அன்புத் தோழியை அன்றோ!'

உண்மைதான்!
தோழி மட்டுமன்று;
இன்னும் ஒருபடி மேலே சென்று,
என் கழுத்தைக் கட்டிக்கொண்டு,
'என் செல்ல அம்மா!
என் பட்டு அம்மா!' என்று
என்னைக் கொஞ்சும் தருணங்களில்
என்னைக் குழந்தையாக அன்றோ
எண்ணச் செய்துவிடுகிறாள்!

அப்போது,
இந்தப் பொல்லாப்பெண் செய்யும்
தவறுகளை எல்லாம்
ரசிக்கத்தானே முடிகிறது!

'என் அருமை மகள் இவள்!'
என்ற இறுமாப்பு மேலோங்க,
அழகாய் விடைபெறுகிறது,
என் ஒவ்வொரு நாளும்!

- கீதா மதிவாணன்

0 comments:

Post a Comment