Friday, May 15, 2009

சொல்லாத காதல்...

ஒவ்வொரு முறையும் சொல்ல முடியாமல்
தங்கும் வார்த்தைகள்
ஒவ்வொரு நீர்த் தேக்கமாய். . . .
இப்பொழுதெல்லாம் அதிகமாகப் பதறுகிறேன்
எங்கே நீர்த் தேக்கங்களெல்லாம்
ஒன்றாய்ச் சேர்ந்து
என் மனதை அழுத்தி
என்னை மூழ்கடித்து விடுமோவென....

நான் மூழ்கிப் போகும் முன்,
காதலே என்னைக் காப்பாற்று. . . .
சொல்ல வந்ததைச் சொல்லாமல்
எச்சிலோடு என்னுள் விழுங்கும் போதெல்லாம்
என்னை விட அதிக பாரத்தைத் தாங்குகிறது
என்னிதயம்...

தொலைபேசியில்
உன் குரலைக் கேட்டதும்
திசைக்கொன்றாய் ஒடி ஒளிந்திடும்
என் வார்த்தைகளை
ஒன்றாய் மீண்டும் கோத்து
நான் ஒப்புவிக்கும் முன்னே,
'பேச நினைத்தெல்லாம்
மறந்து விட்டேன்' என நீ கூறுகையில்
'உன் வார்த்தைகளும் கூடவா?'
எனச் சிரிக்கின்றது காதல்...

கோ.வினோதினி

0 comments:

Post a Comment